Sunday, February 12, 2012

சக்தி செல்வகணபதி - 9


9
அந்தமான் கப்பல் பயணத்தை இன்றளவும் நெஞ்சக்கூட்டுக்குள் நெருக்கமாய் கொண்டுள்ளார் சக்தி செல்வகணபதி. அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதி என்றபோதும் தீவுக்கூட்டம் என்கிற வட்டத்துக்குள் வாழும் பூமி அது. சிலிர்ப்பாக அலை தழுவும் கடலில் அவரின் பயணம் நிகழ்ந்தது. நிக்கோபார் தீவுகள் போன்ற தீவுகளைப் பார்த்த அனுபவங்களை இன்றும் அசை போடுகிறார் சக்தி செல்வகணபதி.






அந்தமானைப் பொறுத்தவரை பக்கத்து, பக்கத்துச் சிறு தீவுகளுக்கு நம்மூரில் டவுன் பஸ் சென்று வருவது போல் சிறிய ரக கப்பல்களில் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் என்கிற நினைவைச் சொல்கிறார். ஐந்து ரூபாய் ஏழு ரூபாயில் சிறு படகுகளின் கட்டணம் இருந்திருப்பதை நினைவு கூறுகிறார். ஆனால், அவரைப் பிரமிப்புக்கு உள்ளாக்கியது அங்குள்ள முழு உருவ மகாத்மா காந்தி வெண்கலச் சிலைதான். எண்ணற்ற சுதந்திரப் போராளிகளைச் சுமந்த அந்தமான் சிறைக்கு முன் மனம் முழுவதும் கனக்க கண்களில் நீர்த்துளி துளிர்த்தது. அந்தமான் ஒவ்வொரு அறையிலும் சிறைகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறது அவர் மனம்.








ஒரு தடவை மானசீகமாய் மனதுக்குள் தொட்டு வணங்கியிருக்கிறார். சுதந்திரப் போராளிகள் துன்பப்பட்ட இடத்தை, அந்தமானில் நிகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு அந்தமான் தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட விழாவில் மூ. வேதையன் துணைவியாருடன் கலந்து கொண்ட இனிய பதிவையும், அவர் நினைவு கொள்கிறார்.
அந்தமான் பயணத்தில் இருந்து திரும்பி சிலநாள் சென்று தீராத் துன்பத்தை மனதில் சுமக்கும் சம்பவம் நடந்தது. அதுதான் சுனாமி. அருகாமையில் உள்ள நாகையில் கொத்துக் கொத்தாய் இரும்புக்கைகளால் கனரக இயந்திரம் பிணங்களை அள்ளி எடுத்தபோது எல்லோரையும் விட அதிகம் மனம் நொந்தார் சக்தி செல்வகணபதி. அவர் சக அமைப்புகளுடன் மட்டுமின்றித் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து தன்னால் இயன்றதைச் செய்ய முன் வந்தார்.
சுனாமிக்குப் பின் ஒருவார காலங்கள் அதிகமாக அவரது வணிக நிறுவனத்தில் அமர்வதில்லை. அவர் மற்ற அமைப்புகளுடன், நண்பர்களுடன் இணைந்து நாகப்பட்டினத்திற்கும், திருவாரூருக்கும் சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். துணிகள், உணவு, இருப்பிடம் போன்ற பொருட்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதில் கணிவுடன் மற்றவர்களோடு கைகோர்த்துக் கவனித்தார். தான் ஒரு காங்கிரஸ்காரனாக இருந்தபோதும் உண்மையான தமிழ் கூறும் நம் உலகுக்கு அறிவிக்கும் வகையில் அரசின் ஆணையான தமிழில் பெயர்ப் பலகை வைக்கும் ஆணையை நிறைவேற்றும் வகையில் தனது வணிக நிறுவனத்திற்குச் சக்தி மணிப்பொறியகம் எனப் பெயர் மாற்றினார் சக்தி செல்வகணபதி.
முன்பு ஒருமுறை நரசிம்மராவின் 1000 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு டெல்லி அழைத்தது போல் மறுபடியும் காங்கிரஸ் மகாநாட்டிற்கு விரைந்தார் சக்தி செல்வகணபதி. கட்சிப்பணி, வணிகம் மற்றும் சமூகத்தொண்டு, சேவை அமைப்புகளுடன் கைகோர்ப்பதென தொடர்ந்தோடியது. அவருடைய நேரம் முழுமையும் இன்றளவும் சக்தி செல்வகணபதி கடையில், கட்சி, மதம், சாதி என பிரிவினை இன்றி அனைவரோடும் கூடிப் பேசுவடிதைத் தங்களின் அன்றாட வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் சேவாதளத்தில் பொறுப்பேற்ற பின் சுமைகள் கூடிய அவருக்கு ஓசூர் மற்றும் கரூரில் நடைபெற்ற காங்கிரஸ் சேவாதளப் பயிற்சி அரங்கில் அவருக்குச் சிறப்பான வரவேற்புகள் மற்றும் சான்றிதழ் கிடைக்கப் பெற்றன.







சக்தி செல்வகணபதி தனது தந்தையார் தெட்சணாமூர்த்தியை மிக வெகுவாக நேசித்தவர். தந்தையாருக்குச் சதாபிஷேகம் செய்த நிறைவு நெஞ்சில் இருக்க, தந்தையாரின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. தந்தையின் கண்கள் மற்றவர்களுக்கு வழி காட்டும் ஒளி விளக்காய் இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அலிவலம் இல்லத்தில் நிகழ்ந்த தந்தையின் மரணத்திற்குப் பின், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தனது தந்தையார் தெட்சணாமூர்த்தியின் கண்களைத் தானம் செய்தார். கண்கள் நீக்கப்பட்டு உடன் பார்வை வங்கிக்கு அனுப்பப்பட்டதில் பெருந்தவம் செய்ததாகக் கருதினார் சக்தி செல்வகணபதி.

No comments:

Post a Comment